Saturday, August 29, 2026

என் காதல் கதைகள்...

அவளுக்காக கடையம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன்.

அன்று அவள் பேருந்திலிருந்து இறங்கி, கையில் ஒரு பேக்குடன் நடந்து வந்தாள். நான் என் பைக்கில் அங்கே வந்திருந்தேன். அவளைப் பார்த்த அந்த நொடியில் என் மனதுக்குள் ஏதோ ஒரு மாற்றம்.

ஒருபக்கம் சந்தோஷம்… இன்னொரு பக்கம் பயம்… அதைவிட அதிகமாக பதட்டம்.

யாராவது பார்க்கிறார்களா என்று சுத்தி பார்க்க சீக்கிரம் கிளம்புவோமா யாராவது தெரிஞ்சவங்க பாத்துருவாங்க என்றாள் மென்மையாக 

“எங்கே அழைத்துச் செல்வது?” என்று எனக்கே தெரியவில்லை.

அந்த நேரத்தில் கடையத்தில் எனக்குத் தெரிந்த இடம் என்றால், எங்கள் வயல் மட்டும்தான். அந்த வயலில் ஒரு பெரிய பாறை இருந்தது. அந்தப் பாறைதான் அப்போது எனக்கு உலகத்திலேயே பாதுகாப்பான இடமாகத் தோன்றியது.

அதனால் அவளை என் பைக்கில் அழைத்துக்கொண்டு எங்கள் வயலை நோக்கிப் புறப்பட்டேன். பாதை குண்டும் குழியுமாகதான் இருந்தது.

காலை நேரமாக இருந்தாலும் வெயில் பயங்கரமாக இருந்தது. சூரியன் தன் வெப்பத்தை முழுவதுமாக எங்கள்மீது கொட்டிக்கொண்டிருந்தான்.

நான் பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் என் மனம் மட்டும் வேறு எங்கோ ஓடிக்கொண்டிருந்தது.

அவள் என்ன நினைப்பாள்?

நான் அழைத்துச் செல்லும் இடம் அவளுக்குப் பிடிக்குமா?

என்னிடம் பேசுவாளா?

இப்படி ஆயிரம் கேள்விகள் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

கடைசியில் எங்கள் வயலை அடைந்தோம்.

அங்கே இருந்த அந்தப் பாறையின் அருகில் அவளை அழைத்துச் சென்றேன். வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அந்த வெயிலைக்கூட நான் கவனிக்கவில்லை.

ஏனென்றால், என் அருகில் அவள் இருந்தாள்.

அந்த நாள் நடந்தது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையில் அது மறக்க முடியாத ஒரு நாளாகிவிட்டது.

கடையம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய அந்த சந்திப்பு, என் வாழ்க்கையின் அழகான காதல் கதையாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

இன்றும் அந்தப் பாறையை நினைத்தாலே, அந்த முதல் சந்திப்பும், அந்த பதட்டமும், அந்த பயமும், அவளை முதன்முதலில் பார்த்த அந்த நொடியும் என் கண்முன்னே வந்து நிற்கிறது.

அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஏனென்றால், அது அவளை நான் முதன்முதலில் பார்த்த நாள் மட்டுமல்ல…
என் காதல் கதையின் முதல் பக்கமும் அதுதான்.

வளரும்...

No comments: