Monday, October 25, 2010

என்று தான் இந்த நிலை மாறுமோ?


இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமெடியாக, பாட்டாக, காட்சியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

அதே போல தான் சின்னத்திரையும். நாடகம் போடத ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டிய விசயம். இப்படி மக்களை பல வகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பெண்களை நோக்கும் விதம் இன்னும் மாறுபடவில்லை?

பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களை பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்களை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான்.

அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்?

அண்மையில் ஒருபடம் பார்க்க கிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியை காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விசயமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பது அந்த பெண்ணின் சம்மதத்தோடு நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்கிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் "நீ அவளை எடுத்துக்கோ" என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது. இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகம் பெண்ணை நோக்கி பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையை காட்டுவதற்கு? இப்படி பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க.

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கல்யாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்பது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள்.

திரைப்படங்களில் வருகின்ற இன்னொரு விசயம் என்னவென்றால், நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது, "பொம்பளை மாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை.

படத்தில ஒரு ரவுடி கலாட்டா செய்கிறார். அதன் காரணமாக ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுகிறார். இதைப்பாத்த அம்மா கோவம் கொண்டு அந்த ரவுடியை பேசிறாங்க. பொலீஸ் வர, அந்த அம்மா நடந்ததை சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படி படைக்கிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விசயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு இருக்க முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்

No comments: