பாட்டெழுது பூங்குயிலாய், பாதையிடை பூக்களிலே
நாடியுணர் நாயகியின் தேவிமுகந் - தேடிவரு
மாணழகர் காதலிதம் நாணமதை நீத்துன்னிக்
காண்பதுவே காளைக் கனவு.
மெல்லணையாய் பெண்டிரையே மோகவலை தானேறி
கள்ளமன வண்டெனவே கள்ளருந்த - ஆலுகின்ற
வீணரையே வேண்டாது வாழ்வுதனை இன்னலற
காணுமிளங் கன்னிக் கனவு.
பண்ணிசையோ அன்றியொரு பாவெழிலோ தானன்றி
தன்னெதிரில் மூவேளை தம்மக்கள் - உண்ணுதலைக்
கண்ணார நெஞ்சாரக் காண்பதுவே வாணாளில்
காணுமோ ரேழைக் கனவு.
ஏட்டினிலே நானிலமே ஏத்தும் சொல்லிசைப்
பாட்டினிலே சீலமிகு பாரதநம் - நாட்டினிலே
வாணுதல் பூவையரின் காதலதே வாழ்வென்று
காணுதலோர் மோழைக் கனவு.
பாழ்பட்ட செல்வத்தை ஊணறவே சோர்வின்றி
சூழ்ந்திட்ட ஏனையர்க்குஞ் சேர்வின்றி - தாழிட்டு
பேணியவர் தூக்கமற பேயொக்க ஏனாதியாய்
காணும்பே ராசைக் கனவு.
No comments:
Post a Comment