Sunday, February 12, 2012

தென்காசி


தென்காசி பாண்டியர்

பாண்டியர் பெயர்க்காரணம்
பண்டு=பண்டைய=பாண்டிய=பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.

தென்காசி பாண்டியர்
பாண்டியர்களின் கடைசி தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராக கொண்டனர். அவ்வூரின் பெரியகோயிலில் முடி சூட்டிக்கொண்டனர். அதற்கு முன் நெல்லை, மதுரை, மணலூர், கபாடபுரம் மற்றும் தென்மதுரை தலைநகர்களாயிருந்தன. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசி பாண்டியர் எனப்படுவர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தாறு, வள்ளியூர் போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும்.


தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.
எண் பெயர் காலம்
1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
2. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
3. அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
4. குலசேகர தேவன் கி.பி. 1479-1499
5. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
6. பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
7. நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
8. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
9. வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
10. வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
11. கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர்.மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.

வேறு பெயர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது.

சச்சிதானந்தபுரம்
முத்துத்தாண்டவநல்லூர்
ஆனந்தக்கூத்தனூர்
சைவமூதூர்
தென்புலியூர்
குயின்குடி
சித்தர்வாசம்
செண்பகப்பொழில்
சிவமணவூர்
சத்தமாதரூர்
சித்திரமூலத்தானம்
மயிலைக்குடி
பலாலிங்கப்பாடி
வசந்தக்குடி
கோசிகை
சித்தர்புரி

நகரமைப்பு

பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன.

மாசி வீதி : அவை முறையே தெற்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, வட மாசி வீதி, மேலமாசி வீதி எனப்படும். இதில் பிராமணர்களே பெரிதுமிருந்தனர்.
வேளாள வீதி : இவற்றில் வேளாண்மை செய்வோர் (பிள்ளை, செட்டி) இருந்தனர்.
கோனார்க்குடி : இவற்றில் பால் வியாபாரம் செய்வோர் (ஆயர்) இருந்தனர்.

பழங்குடிகள்
பலியர்
சங்கரன் கோயில் வட்டத்தில் வாசுதேவ நல்லூருக்கருகில் தலையணை என்னுமிடத்தில் வாழ்கின்றனர். குள்ள உருவமும் பரந்த தலை முடியையும் கொண்டவர்கள். தேனெடுத்தல், மான் வேட்டை இவர்களின் முக்கியத் தொழில்கள்.
பளிஞர்
பொதிகை மலையில் கலியாண தீர்த்தத்துக்கு 16 கி.மீ அப்பால் இவர்களின் குடியிருப்பு உள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. சொக்கி என்ற குழல் கருவியை வாசிக்கின்றனர். மலையாளத் தமிழில் தமிழ் பேசுவது இவர்கள் மரபு.
காணியர்
காணியர் பாபநாசம் கீழ் அணைக்கட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள்.
படைத்தளம்
தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.

வாழ்வாதாரம்
நீராதாரம்:தெற்கு மாசி வீதி அடுத்து சிற்றாறு ஓடுகிறது. சிற்றாறே மூலிகைக்குற்றாலத்தின் மூலமாகும். மேலும் சீவலப்பேரி மற்றும் வன்னான் குளங்களிருந்தன.மேலும் பல அருவிகள் ஆதிவாசிகளுக்கு நீராதாரமாயிருந்தன.

நெற்களஞ்சியம்:
தென்காசி நெற்களஞ்சியம் அம்பாசமுத்திரமாகும்(அம்பை). அம்பை 16 என்னும் அரிசி ரகம் 5 வருடங்களுக்கு முன்வரை பரவலாக வழக்கத்திலிருந்தது.

கட்டிடக்கலை
திருக்குற்றாலநாதர் கோயில்
தென்காசி கோயில்
குலசேகரநாதர் கோயில்

முக்கியக்கோயில்கள்

1.தென்காசி கோயில் - மூலவர் காலம் தெரியவில்லை. கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
2. திருக்குற்றாலநாதர் கோயில் - மூலவர் காலம் தெரியவில்லை. கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
3. குலசேகரநாதர் கோயில் - சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.

தென்காசி ஆலயச்சிறப்பு
வாயுவாசல் - இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம்.

இசைத்தூண்கள்
இக்கோயிலில் 16(2*8) இசைத்தூண்கள் பாலசுப்பிரமணிய ஆலய வாசலில் அமைந்துள்ளன. இந்த எட்டு தூண்களிலும் முறையே ச ரி க ம ப த நி ச சுவரங்கள் ஒலிக்கும். மேலும் சிறப்பென்னவென்றால் சுப்பிரமணியனின் இடத்தூண்கள் மென்சுவரங்களும் (பெண்), வலத்தூண்கள் வன்சுவரங்களும் (ஆண்) கொண்டவை.

ஒற்றைக் கல் சிலைகள்
மூலம்:தமிழ்வு
இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.

அக்னி வீரபத்திரர்
ரதிதேவி
மகா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
காளிதேவி
மகாவிஷ்ணு
மன்மதன்
வீரபத்திரர்
பாவை
பாவை
தர்மன்
பீமன்
அர்ச்சுனன்
நகுலன்
சகாதேவன்
கர்ணன்
மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.

சுரங்கப்பாதைகள்
தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கி செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாக தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

திருமலைப்புரம் ஓவியங்கள்
தென்காசி கடையநல்லூருக்கு அருகில் திருமலைப்புரம்(திருமலை கோவில்) உள்ளது.இங்குள்ள மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

No comments: