Monday, February 6, 2012

லால் பகதூர் சாஸ்திரி


சாஸ்திரிஎன்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது.

எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 - ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார்.

1926 ல் தேசியத் தலைவரான லஜபதி ராய் துவக்கி, நடத்தி வந்த மக்கள் பணி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அச்சங்கத்தில் சேர ஒரு நிபந்தனை இருந்தது. பணியில் சேர்ந்தால் 20 ஆண்டுகள் பொதுப்பணி புரிய வேண்டும். தூய, எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். வாழ்க்கை செலவுக்கு மாதம் ரூ.60மட்டுமே வழங்கப்படும். லால்பகதூர் அதனை ஏற்று உறுப்பினரானார்.

1930 ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பேசி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் காந்தியடிகள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனையும்,வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்தார். தனக்கென்று எந்த வேலையையும் தேடிக்கொள்ளாமல் மக்கள் பணிச்சங்கம் அளித்த 60 ரூபாயில் குடும்பத்தை நடத்தினார்.

1964 ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாளில் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 ஜனவரி 10 - ஆம் நாள் ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடைபெற்ற இந்திய பாக்கிஸ்தான் சமரச பேச்சின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தது வரை ஒன்றரை ஆண்டுகளே பிரதமராக இருந்தாலும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது. அவரது எளிமை, நேர்மை, உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவையே குன்றா புகழை தேடித்தந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றபோது 1947 - ல் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952 ல் ரயில்வே அமைச்சரானார். 1957 - ல் செய்தித்துறை,போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1961 - ல் உள்துறை அமைச்சராகவும் ஆனார். 1965 - ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாரதத்தின் பிரதமராக விளங்கிய லால் பகதூர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி வெற்றிக் கண்டார். தன் வாழ்வு பற்றி கவலைப் படாது பாரதத்தின் நல் வாழ்வுக்காக உழைத்த அந்த உத்தமரை நினைவில் கொள்வோம்.

No comments: