தக்க வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்ப்பதால், நம் சின்னஞ்சிறு குழந்தைகளின் குழந்தைப் பருவம் எங்கோ காணாமல் போகிறது. இன்று அவர்கள் பந்து விளையாடுவது மண்ணில் வீடு கட்டுவது போன்றவற்றை விட்டு விட்டு கிளிகள் போல் பெரிய பெரிய நர்சரி ரைம்ஸ், பாடங்கள், கதைகள் போன்றவற்றை (அவற்றின் அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது!
தங்கள் குழந்தைகள் ஆங்கில ரைம்ஸ் சொன்னால் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இன்று அந்த பிள்ளைகளின் குழந்தைத்தனம் முடிந்து வருகிறது. அவர்கள் வயதுக்கு மிஞ்சிய புத்திசாலியாகிறார்கள்.
இதற்குக் காரணம் தக்க வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுதான். தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தாய்மார்கள் 2-3 மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் ஓடும்போது, ஏன் நம் குழந்தை மட்டும் பின்தங்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.
சில பள்ளிகளைத்தவிர பெரும்பாலான பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் வியாபார கூடங்களாக உள்ளன. அந்த பள்ளிகளில் உட்காருவதற்கு கூட சரியாக இடம் இல்லமல், அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவையான படிப்பை நீங்களே விளையாட்டாக வீட்டிலேயே சொல்லித்தரலாம். நிச்சயமாக குழந்தைகள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
குழந்தைகளின் மனம் அழகானது. அவர்களை சரியான வயதுக்கு முன்பே கட்டுப்பாடுகளில் கட்டிப் போடாதீர்கள். அவர்கள் படிக்கும் பள்ளி 5-ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதி கொண்டதாக இருப்பினும், வீட்டின் சுதந்திரத்துக்கு ஈடு இணையில்லை. அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து நாம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடை போடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
படிப்பதற்கு பல ஆண்டுகள் உள்ளன. ஆனால் குழந்தைப் பருவம் விரைவில் முடிந்துவிடும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டுமே!
No comments:
Post a Comment