ஒரு நல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும் என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.
அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.
“தலைமைப் பண்பில் நேர்மையும் அறமும் தேவை.. ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.
“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.. இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப்புக்கு தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.
தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணாவிரததத்தில் இறங்கி விட்டார்.
மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட... உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.
வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும் வேண்டும். நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள் என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் பள்ளி சென்றிருந்த போது இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.
இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப் என்று குறிப்பிட்டேன்.
இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.
No comments:
Post a Comment