தமிழகத்தின் 46 சதவீத பள்ளிகளில் ஒரு கழிப்பறை கூட இல்லை என்கிறது “குழந்தைகள் உரிமைகளும், நீங்களும்” என்ற தன்னார்வக் குழுவின் கள ஆய்வு. இன்னும் ஆறு மாதங்களில் அனைத்துப் பள்ளிகளும் போதுமான கழிப்பறைகளைப் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த போதிலும் அதனை பள்ளிகள் எதுவும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
சென்னையில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினரில் 100 க்கு 94 பெற்றோர்கள் போதுமான கழிப்பறை வசதிகளோ அல்லது இருபால் பிரிவினருக்கும் தனித்தனியான கழிப்பறைகளோ இல்லாத காரணத்தால் தான் தமது பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து இடையிலேயே நிறுத்தி விடுகின்றனர். பெரும்பான்மை பெற்றோர்களுக்கு (85%) கழிப்பறை வசதி குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தாலும் அடிப்படை வர்க்கமாக இருப்பதால் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டியுள்ளது. அங்கு கழிப்பறைகள் சில சமயங்களில் அமைந்து விட்டாலும் பராமரிக்கப்படாத காரணத்தால் அங்கே போகவும் முடியாது. அதற்கு போதுமான துப்புரவுத் தொழிலாளிகளை அரசு நியமிப்பதும் இல்லை. தனியார்மயம் கல்வியில் நுழைந்த பிறகு அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ‘முன்னேற்றங்கள்’ இவை.
தனியார் பள்ளிகளில் கூட கழிப்பறைகள் இருப்பது குறைவுதான். மாணவர் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகளைக் கட்டுவதில்லை. அந்த காசில் இன்னொரு வகுப்பு கட்டி விட்டால் பணம் அதிகமாக கிடைக்கும் என்ற கல்வி முதலாளிகளின் இலாப வெறிதான் அதற்கு காரணம். ஆனால் இந்த வசதி கிடைக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் நடுத்தர வர்க்கத்திலாவது பிறந்திருக்க வேண்டும். அதுவும் பெண் குழந்தையாகப் போய் விட்டால் அதோ கதிதான். இதற்கு தோதாக பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறைகளை அரசுப் பள்ளிகளில் கட்டாமலே இருந்து விட்டார்கள். அப்போது தானே அங்கிருந்து குழந்தைகள் தனியார் பள்ளிக்கு இடம் பெயருவார்கள். ஆனால் பெண்களுக்கோ இதனால் கல்வியே தடைப்படுகிறது.
இது போக பெண் குழந்தைகள் படிப்பை இடையில் கைவிடுவதற்கு சிறு வயதில் திருமணம், பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் பெண் ஆசிரியைகள் குறைவு போன்றவற்றை பட்டியலிட்டுள்ளனர். ஆணாதிக்க மதங்கள் பெண்களுக்கு கல்வியை மறுத்து வந்த சமூகச் சூழலின் விளைவுகள் தான் இவை என நமக்கு நன்கு தெரிந்தாலும் அதற்கு பொருத்தமாக நகர்மயமான பின்னரும் பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமைக்கு பெரும்பாலும் ஆதரவாக இருப்பதில்லை. இருக்கும் பணத் தட்டுப்பாட்டில் ஆண் குழந்தைக்கா அல்லது பெண் குழந்தைக்கா கல்வி அளிப்பது என்ற கேள்வி எழுந்தால் தவிர்க்கவியலாமல் பெண் குழந்தை தனது வாய்ப்பை இழந்து விடுகிறாள்.
இந்த ஆய்வில் இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு நகரங்களில் மட்டும் 6-10 வயது இடைவெளியில் 25% பெண் குழந்தைகளும், 10-13 வயதில் 50% பெண் குழந்தைகளும் படிப்பை பாதியில் கைவிடுவதாக தெரிய வந்துள்ளது. ஜாடிக்கேற்ற மூடி போல பெண்ணடிமைத்தனத்திற்கு ஏற்ற தனியார்மயம்தான் கல்வியில் கோலோச்சுகிறது.
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
1 comment:
நல்ல பகிர்வு...
வலைச்சரம் மூலம் (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post.html) உங்கள் தளத்திற்கு வருகை…
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…
Post a Comment