Sunday, October 7, 2012

இந்தியாவையே ஆளப்போவது ஆங்கிலேயர்களா ? பிரெஞ்சுக்காரர்களா ? என தீர்மானித்த வந்தவாசி கோட்டை !


இந்தியாவையே ஆளப்போவது ஆங்கிலேயர்களா ? பிரெஞ்சுக்காரர்களா ? என தீர்மானித்த வந்தவாசி கோட்டை !

இந்திய துணைக்கண்டமும், ஆங்கிலேய,பிரெஞ்சு பேரரசும் 250 ஆண்டுகளுக்கு முன் மரியாதையுடன் உச்சரித்த பெயர் " வந்தவாசி ". மனிதர்கள் வாழ்வில் வரும் ஏற்றத்தாழ்வை போல பழம் பெருமையை தக்க வைக்க இயலாத வந்தவாசியும் கால சுழற்சியில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண தாலுக்கா !.புதர்கள் மண்டி,பன்றிகள் மேய்ந்து கொண்டு ,சாக்கடை பாய்ந்து கொண்டிருக்கும் இன்றைய " வந்தவாசி " கோட்டையை கைப்பற்ற, சரியாக 252 ஆண்டுகளுக்கு முன்னர் " பிரான்ஸ், இங்கிலாந்து " என்ற இரண்டு பெரிய நாடுகள் மோதிக் கொண்டது. ஏற்கனவே இரண்டும் இந்தியாவில் கால் பதித்துவிட்ட நாடுகள் தான் என்றாலும்.இவர்களிடையில் இந்தியாவை கைப்பற்ற அவ்வபோது போர்கள் நடந்து வந்தது.வங்காளத்தில் பிளாசிப்போரில் ஆங்கிலேர்கள் பிரெஞ்சுக்காரர்களை 23.06.1757 -ல் வென்றனர்.வந்தவாசிக் கோட்டையைப் பிடித்தால் தான் அவ்வெற்றியை ஊர்ஜிதம், தன்னுடைய பலத்தை மேலும் ஆழமாக நிரூபித்து, மார்தட்ட முடியும். சென்ற போரில் தோல்வி அடைந்ததால் பிரெஞ்சுக்காரர்களுக்கு வந்தவாசிப் போரில் வெல்ல வேண்டிய கடுமையான நிர்பந்தம் இருந்தது.மேலும் இந்த வெற்றி,அடுத்த 187 ஆண்டுகள் ( 1760 - 1947 ) ஒட்டு மொத்த இந்தியாவையே ஆளப்போவது ஆங்கிலேயர்களா ? பிரெஞ்சுக்காரர்களா ? என தீர்மானித்தது.

1760 ஜனவரி 22 ஆம் நாள் " தாமஸ் ஆர்தர் லாலி " என்ற பிரெஞ்சுத் தளபதி தலைமையில் தங்கள் வசம் இருந்த கோட்டையை காப்பாற்ற பிரெஞ்சுக்காரர்களும், " சர் அயர் குட் " என்ற ஆங்கிலேயத் தளபதி தலைமையில் அதை கைப்பற்ற ஆங்கிலேயர்களும் போருக்கு தயாரானார்கள். ஆங்கிலேர்களிடம் 1664 ஐரோப்பிய காலாட்படை, 2100 சிப்பாய்கள்,85 ஐரோப்பிய குதிரைப்படை, 1250 மூரிஸ் குதிரைப்படை வீரர்கள், 108 பீரங்கிப் படை வீரர்கள், 14 பீல்டு பீரங்கிகள், 1 அவிட்சர் பீரங்கி இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் வசம் 2000 ஐரோப்பிய காலாட்படை, 10000 கறுப்பர் படைவீரர்கள் ( மராட்டிய குதிரைப்படை வீர்களுடன் சேர்ந்து ) 300 மார்புக் கவசங்கள், 20 பெரிய பீரங்கிகள் அவற்றுடன் கூட 5 பெரிய பீரங்கிகள் ( பேட்டரி மூலம் இயங்கும் வகை ), தொலை தூரம் குண்டு எரியும் பீரங்கிகள் ஆகியவை இருந்தன.

காலை 7 மணிக்கு தொடங்கியது போர் ,ஆங்கிலேயர்கள் வென்ற இந்த போரில் பிரெஞ்சுப்படையின் போர்வீரர்கள் சுமார் 600 பேரும், ( 37 கமிண்டு அதிகாரிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் ) உடல் ஊனம், போர்கைதிகள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் என கணக்கிடப்பட்டது. அவர்களுடைய ஒட்டு மொத்த பீரங்கிப்படையும் ( 3 கள பீரங்கிகள் தவிர ), போர்த்தளவாடங்களுடன் வந்தவாசி கோட்டையை கைபற்றுவதற்க்காக அழிக்கப்பட்டன. ஆங்கிலேய படையில் 3 அதிகாரிகள், 48 நான்கமின்டு அதிகாரிகள் மற்றும் சில உள்ளூர் ஆட்கள் கொல்லப்பட்டனர்.9 அதிகாரிகளும், 187 நான் கமிண்டு அதிகாரிகளும், தனிநபர்களின் காயமடைந்திருக்கிறார்கள்.

1760 லிருந்து 1763 ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகள் முழுவதையும் தனது ஆளுமையில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்கு பாண்டிச்சேரி, சந்திரநாகூர், ஏனாம், காரைக்காலை விட்டுக் கொடுத்தனர். இந்த இடங்களை கடைசி வரை பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஆகஸ்டு 15 , 1947 -ல் இந்தியாவை விட்டுச் சென்றனர். ஆங்கிலேயர்களுக்கு முன்னரே வந்துவிட்டதாலோ என்னமோ, ஆங்கிலேயர்கள் சென்ற ஏழு ஆண்டுகள் கழித்துதான் அதாவது 1954 - ல் இந்தியாவை விட்டு பிரஞ்சுக்காரர்கள் வெளியேறினர்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோட்டை இன்று இப்படி ஒரு நிலையில்,பராமரிப்பு இல்லாமல் இருப்பது வேதனை.

No comments: