Friday, March 9, 2012

அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்

அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும் இது இயற்கையின் நியதி.. சிறியவை மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்".

நம்மில் பலர் யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம். அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி ...!!

No comments: