பொதுவாக, முதுகலை பட்டம் பயில நிச்சயமாக மூன்று அல்லது நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதை கல்லூரியில் சேர்ந்தோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவே பயின்று இருக்கலாம். அதே சமயம், பட்டப்படிப்புடன் உங்களது டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும், உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகில், வேலைக்கு ஆட்களை தேடுபவர்கள் நீங்கள் சான்றிதழ் கோர்ஸ் படித்திருக்கிறீர்களா, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா அல்லது பட்டப்படிப்பை கல்லூரியில் படித்தீர்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அவர்கள் கொடுக்கும் வேலையை செய்யும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை மட்டுமே. அதேப்போலத்தான், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உங்களது பட்டப்படிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதேத் தவிர, அதை நீங்கள் எந்த முறையில் படித்தீர்கள் என்பது அல்ல.
பலரும், தாங்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாத பணிகளை செய்வதும், சிலர் தாங்கள் பெற்ற பணி அனுபவத்திற்கேற்ற படிப்பினை படிப்பதும் படிப்பிற்கும், திறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. மேலும், நல்ல திறமையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வில், கல்விச் சான்றிதழுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நேர்கானலில் கேட்கப்படும் கேள்விகள், எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கிறது. அதே சமயம், பல நிறுவனங்கள் தாங்கள் தேர்வு செய்யும் ஆட்கள் பட்டப்படிப்பை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று விதிமுறையை வைத்துள்ளனர்.
இந்த விதிமுறையை பல நிறுவனங்கள் கவனமாக கையாள்கின்றன என்பதால் பணி அனுபவம் பெற்ற பிறகும், அதற்கேற்ற பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் கற்கும் பல ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் வேலை தேடும் போது இந்த பட்டப்படிப்பானது ஒரு பக்கத்துணையாக மட்டுமே இருக்கும். அவரது திறமைதான் முதன்மையானதாக இருக்கும் என்பதில் நினைவில் கொள்ளவும். ஆனால், கல்லூரியில் படித்த பட்டப்படிப்பிற்கும், தொலைதூரக் கல்விக்கும் எந்த வேறுபாடும் இல்லையா என்று கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் ஏக்கத்தோடு கேட்பது புரிகிறது.. நிச்சயம் உண்டு. ஒரு பணிக்கு இரு வேறு விதமான நபர்கள் விண்ணப்பித்து, இருவருமே திறமையுடன் காணப்பட்டால், அதில் கல்லூரியில் படித்தவரைத்தான் நிர்வாகம் முதலில் பரிந்துரைக்கும். அதேப்போலத்தான் மற்ற இடங்களிலும் கூட கல்லூரி பட்டப்படிப்பிற்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கப்படும். நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் முன்னேற்றம் அடையவும், மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் டிப்ளமோ படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் நிச்சயம் உதவும். ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்த படிப்பிற்கும், அதற்குரிய முக்கியத்துவம் கிடைத்தே தீரும்.
No comments:
Post a Comment