இந்த சொல்லை சொல்வதற்கே நெஞ்சில் வலிமை வேண்டும். வருகிறேன் என்றவன் வாராமல் போய் விட மணித்துளிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக. மாதங்கள் பல வருடங்களானது. அவன் வருகை இன்னும் தாமதமாகவே உள்ளது. நிழலுக்கு ஏங்கும் பாலைவனமாய் என் மனது அவன் வருகைக்கு ஏங்கியது. சில இடங்களையும், பொருட்களையும் காணும் போதெல்லாம் மனசுடைந்து போகின்றேன் ... அவனும் அவன் நினைவுகளும் கடலோரம் வரைந்த கவிதைகளாய் அலைகளோடு காணாமலே போனது நிஜம் தானா ..?
இன்று வரை புரியவே இல்லை. எதோ மனதை வருட விழி மலர்ந்து பார்க்கிறேன். அதே இடம், அதே இருக்கை... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவன் நினைவு மட்டும் இன்னும் அப்படியே ஒட்டிகொண்டது மனசெல்லாம்.
இதே புகையிரத நிலையத்தில் தான் அன்று நானும் அவனும் சந்தித்தோம். நினைவுகள் அலை மோத இளங்காற்றை சுவாசிக்கிறேன். நடு இரவு ... வீதிக்கு வருகிறேன். தூரவே என்னை கண்ட பறவைகள் சிறகடிக்கின்றன. எங்கோ நாய் ஊளையிடும் சத்தம், வீதியை வெறித்து பார்க்கின்றேன் முதல் முதல் அவனை சந்தித்த இடம் எதிர்பாராத மோதலில் சிதறிய புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். அவனும் அடுக்குகிறான் என் புத்தகங்களை பார்வைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ள காதல் பறவை தன் இஷ்டப்படி பறந்தது. பார்வைகள் மட்டுமே பேசிக் கொண்டது. நெடு நாள் வரை ஒரு வார்த்தை பேச மூவிரண்டு மாதம் ஆனது. அந்த வார்த்தை பேசுவதற்குள் வியர்வை துளிகள் காதோரங்களில் சொல் சொல் என்று கூச்சலிட்டு கலைத்து தரையில் சரிந்து விழுந்தது. நெற்றியில் மிஞ்சி இருந்த வியர்வை துளிகள் விழவா வேண்டாமா என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. மெதுவாக இதழ் மலர்ந்து வார்த்தைகளை உச்சரிக்க முனைகிறேன். தொண்டைக்குழியில் எதோ உருள்வதாய் ஓர் உணர்வு வார்த்தைகள் வெளி வர சிரமப் பட்டது. ஒரு வழியாய் மனதை திடப் படுத்தி சொல்வதற்கு வாய் திறக்க. அந்த வார்த்தைகளும் உமிழ் நீரில் மூழ்கி மரணமடைகிறது. திக்கி திக்கி என்றாலும் சொல்லலாமென எண்ணி நிமிர்கிறேன்.
அப்பொழுது ''உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்ற வார்த்தைகள் தேனாய் என் செவிகளில் பாய்கிறது. அதிசயமாய் நிமிர்ந்து பார்கின்றேன் அவன், அவனே தான் சொல்லிவிட்டான். இதயம் திறந்து ... நான் தான் தாமதம். பாதணிகள் கால்களை மூடி இருக்க தரையில் கோலமிட முடியாமல் கால் கட்டை விரல் கோபமாய் ஆடிக் கொண்டிருந்தது, தமிழ் பெண்களுக்குரிய அந்த வெட்கம் தானோ நேர் நோக்க முடியவில்லை அவன் விழிகளை அதில் காதல் அம்புகள் தொடுக்க ஆவலோடு காத்திருந்தன. வேறு எங்கோ பார்த்தப் படி எதுவும் அறியாதவள் போல அவனை கேட்கின்றேன் ''என்ன சொல்லுறீங்க'' என்று மீண்டும் சொல்கிறான் சத்தமாய்...
மற்றவர் திரும்பி பார்க்க நகருகிறேன் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து பாதையை மறித்துக் கொண்டு பதிலை சொல்லிவிட்டு போ என்கிறான். அவன் மேல் எனக்கு இருந்த காதலை அவன் அறிந்திருக்க நியாயமில்லை இருந்தும் வார்த்தைகளை விட முடியவில்லை. அவன் மனதில் நானிருப்பது அறிந்ததும் ஆனந்தக் கண்ணீர் விழிவழியே துளிகளாய் எட்டி எட்டி பார்த்து கண்ணகளில் உருண்டு வர பதைக்கின்றான். தப்பா சொல்லிட்டேனா ...? மன்னிச்சுடுங்க என்கிறான். அவசரமாய் இடைமறித்து சொல்கிறேன் இல்லை இல்லை நான் அப்படி சொல்லவில்லை. குறும்பு தனமாய் அவன் சிரிப்பு கண்களும் சேர்ந்து சிரிக்க என் அருகில் வந்து நோக்கினான் குறு குறுக்கும் அவன் பார்வை என்னை என்னவோ செய்தது வேகமாய் ஓடி மறைந்தேன்.
அவன் துள்ளி குதித்து சிரிக்கும் ஓசை என் செவிகளில் நீண்ட நேரமாய் கேட்டது. அதிகமாய் பேசும் அவனிடம், என் வார்த்தைகள் வெளி வர அச்சப் பட்டு உள் வாங்கிக்கொள்ளும் மௌனமாகவே பேசும் என் மனதின் காதல் வார்த்தைகளை புரிந்து கொள்வான் அவன் எப்பவும் சற்று தள்ளி அமரும் என்னை அவன் விசித்திரமாய் பார்ப்பான். கவிதைகளை வரைந்து நான் நடக்கும் வழியில் போடுவான். கடிதங்களில் கல்லை கட்டி எறிந்து விடுவான். விடுமுறைகளில் காணாமல் தவிக்கும் நம் இதயங்கள் கண்டதும் கட்டித் தழுவிக் கொள்ள ஆசைப் படும். ஆனால் எதோ தடுக்கும். கலங்கிய விழிகளுடன் மன துயரங்களின் பரிமாறல் கொஞ்சமாய் பேசி நிறைய நேசித்து கல்லூரி காலம் கனவுகள் நிறைந்த காலம் இறுதி நாள்.
இன்றாவது நிறைய பேசணும், எண்ணிக் கொண்டு அருகருகே அமர்ந்து எதுவும் பேசாமால் மௌனமாய் இருவரும் கண் கலங்கி நிற்க, ரயில் இருவருக்கும் ஒரே நேரத்தில் வர செய்வதறியாமல் இருவரும் பார்த்துக் கொள்ள அவன் மெதுவாய் சொல்கிறான் "நான் ஊருக்கு போய் கடிதம் போடுகிறேன்."
பிரிய மனமின்றி ரயில்களில் ஏற ரயில் ஊர்ந்து செல்கிறது. இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்ல சோகம் மனதை தழுவிக் கொள்ள அவனும் நானும் கைகளை அசைத்த வண்ணம் பிரிகின்றோம் கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் சொட்டு சொட்டாய் தரையை தொட்டது. ஜன்னலில் சாய்ந்தபடி உறங்கிப் போனேன்.
எதோ கூக்குரலிடும் சத்தம் கேட்டு திடிக்கிடுகிறேன். என்னாச்சு எழும்பி பார்கின்றேன் எதோ விபத்தாம். யாரோ சொல்கிறார்கள் நிறைய உயிர் சேதம் ஆச்சு என்று. எட்டி வெளியே பார்க்கின்றேன். ஒரே கூட்டம். மெதுவாய் தட்டு தடுமாறி ரயிலை விட்டு இறங்குகிறேன் என்ன செய்வதென்று தெரியவில்லை மெதுவாய் நடக்கின்றேன் தண்டவாளத்தில் வந்த திசைக்கே செல்ல ஒரு ரயில் ஆயத்தமாய் நிற்கிறது ஓடிச் சென்று அதில் ஏறுகிறேன். ரயில் நகர்கிறது. நாளைக்கு ஊருக்கு போய்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் மீண்டும் அதே இடம் அதே இருக்கை வந்து அமர்ந்து கொண்டேன் நடு சாமம் என்றதால் ஆள் அரவம் எதுவும் இல்லை அந்த இருக்கையில் முடங்கி படுத்துக் கொண்டேன்
மறு நாள் அதி காலையில் ரயில் நகரும் சத்தம் எழுந்து அமர்ந்து கொண்டேன் எட்டிப் பார்க்கின்றேன் ரயில் ஒன்று ஊருக்கு கிளம்புகிறது அப்போது தான் கவனித்தேன் இரண்டாவது ரயில் பெட்டியில் அவன் சத்தமாய் கூப்பிட்டேன் அவனுக்கு கேட்கவில்லை ரயில் நகர ஆரம்பித்துவிட்டது அவசர அவசரமாய் ஓடுகிறேன் ரயிலில் ஏற ஒருவாறு ஏறிவிட்டேன் கடைசி பெட்டியில் ஒவ்வொரு பெட்டியை கடந்து அவனை தேடி செல்கிறேன். ஒரே சன கூட்டம் அவனருகே வந்துவிட்டேன். அவன் பெயரை சொல்ல எண்ணுகையில் தான் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கவனித்தேன் சரி அவன் அனுமதி வாங்கிவிட்டான் போல துணிவுடன் ஊருக்கு வருகிறான் மனசில் ஒரே சந்தோசம்.
இவனுக்கு தெரியாமலே இவன் பின்னாடி செல்வோம் என்று எண்ணியவாறு மறைந்து அமர்ந்துக் கொண்டேன் ஊர் வந்தது அவன் இறங்கி நடக்கின்றான் நான் குறுக்கு வழியில் சென்று முன் வாசலுக்கு போகாமல் வீட்டு பின் வாசல் வழி செல்கிறேன் யாரையும் காணவில்லை அம்மா அப்பா கூப்பிடுகிறேன் யாரையும் காணவில்லை எங்கே என்று எண்ணியபடி அறையை எட்டி பார்க்கின்றேன் என் தங்கை விசும்பலுடன் சுற்றி அவள் தோழிகள் என்னடி ஆச்சு சத்தமாய் கேட்கின்றேன் அவள் பேசவில்லை.
கோபம் வர வராந்தாவுக்கு விரைகின்றேன் சொந்த பந்தங்கள் சுற்றிவர நிற்க நடுவில் அழகான கண்ணாடி பெட்டியில் யாரது எட்டிப் பார்க்கின்றேன். அதிர்ந்து போகிறேன் நானா அது ஆம் நானே தான். நான் இறந்து விட்டேனா...? மெதுவாக நிமிர்ந்து வாசலை பார்க்கின்றேன் அவன் தூணில் தலையை அடித்தபடி கதறிக்கொண்டு இருக்கின்றான் எல்லோரிடமும் ஓடி ஓடி சொல்கிறேன் நான் இங்க இருக்கேன் அழவேண்டாம் என்று யாருமே கேட்கவில்லை. அம்மாவின் சத்தம் பெருங்குரலாய் கேட்க யாரோ என் உடலை தூக்க. இறுதி சடங்கு நடக்கிறது. என் சக மாணவர்கள் அப்பாவிடம் எதோ சொல்ல அவன் காதுகளில் அப்பா எதோ சொல்ல அவன் அலறுகிறான் அயோ நானா என் கையாள எப்படி நான் அவளுக்கு கொல்லி வைப்பேன் கத்துகிறான் இல்லை இல்லை என்கிறான் அவன் துவண்டு போய் கிடக்கிறான் சுடுக்காட்டில் எனக்கான இறுதி சடங்கு. அவனே செய்கிறான். நான் அவன் பின்னாலேயே சுற்றுகிறேன் அவன் என்னை கண்டுக்கவில்லை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்புகிறான்.
நானும் எல்லோரிடமும் சொல்கிறேன் அவர்கள் கவனிக்கவில்லை அவனுடன் சேர்ந்தே செல்கிறேன் ரயில் பயணம் மீண்டும் அவன் வழி நெடுக அழுது கொண்டே போகிறான் பரிதாபமாய் பார்க்கின்றேன் மீண்டும் அதே இடம் அவனும் இறங்க நானும் இறங்கினேன் அவன் நம் கல்லூரி வாசலில் ஒட்டுகிறான் என் கண்ணீர் அஞ்சலியை அழுதுகொண்டே அவனும் நானும் சந்தித்த இடங்களை ஒவ்வொன்றாய் பார்க்கின்றான் மீண்டும் திரும்புகிறான். தண்டவாளத்தில் தலையை வைக்கின்றான் நான் கதறுகிறேன் வேண்டாம் வேண்டாம் அவனுக்கு கேட்கவில்லை நிற்பவர் முதுகில் பலமாய் தட்டி சொல்கிறேன் அவனை காப்பாதுங்கள்.யாரோ அவனை ஓடி போய் காப்பாற்ற மீண்டும் வருகிறான் மகிழ்கிறேன். அவனை அனுப்பி வைக்கின்றன அவன் செல்லும் திசையை பார்கின்றேன்.
கண்ணீருடன் பல வருடங்களாக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் தண்டவாளங்களை அடிக்கடி சரி பார்க்கின்றேன் இன்னொரு விபத்தும் இன்னொரு காதல் தோல்வியும் வேண்டாமென என்றாவது ஒரு நாள் அவன் வருவான் அவனை பார்ப்பேன் இங்கு இருந்தபடியே கண்ணீருடன் காத்திருக்கிறேன். அவன் ஒரு ஆண்மாவாயேனும் வராமலா போய் விடுவான் எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பேன் அவனுக்காக. அவனுக்காக மட்டுமே.
No comments:
Post a Comment