Monday, May 21, 2012

குட்டீஸ்க்கு ஏற்ற கோடை கால விளையாட்டுக்கள்!

கோடை விடுமுறை இன்னும் கொஞ்சநாள் இருக்கு. இவ்வளவு நாள் மாமாவீடு, பெரியப்பா வீடு என்று டூர் போயிட்டு வந்தாச்சு. வீட்ல சும்மா இருந்தா பசங்களுக்கும் போரடிக்கும். எப்படி சமாளிக்க போறோமோ என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு சின்னதாய் சில ஐடியாக்கள்.

கற்றுக்கொடுங்கள்

குழந்தைகளுக்கு ஒருமுறை கற்றுக்கொடுத்தால் எளிதில் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல.. படம் வரைதல், நாணயம் மற்றும் தபால்தலை சேகரித்தல் புகைப்படக்கலை இவையனைத்தும் வாழ்க்கையில் குழந்தைகளை முன்னேற்றும் படிக்கட்டுகளாகும்.

குழந்தைகளுக்கு பூக்கட்ட கற்றுக்கொடுத்தல், இலை இறகு போன்றவற்றை சேகரித்தல்,மலர்க்கொத்து செய்யகற்றுக்கொடுக்க வேண்டும். பூ மற்றும் இலைகளை சேகரித்து நோட்டுகளில் ஒட்டச்சொல்லுங்கள்.

வர்ணம் தீட்டுதல்

கலர் பென்சில் வாங்கிக் கொடுத்து புத்தகங்களில் வர்ணம் தீட்டச் சொல்லலாம். குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவற்றில் இடம்பெறுகின்ற வழிகாட்டுதல், வித்தியாசங்களை கண்டுபிடித்தல்,புள்ளிகளை இணைத்தல்,வண்ணம் தீட்டுதல் போன்றவற்றை செய்யச் சொல்லாம். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் கற்பனை சக்தி அறிவுத்திறன் அதிகரிக்கும், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவும்.

வண்ணங்களில் கைகள் கட்டை விரல்கள் இவைகளில் ஏதோ ஒன்றை அழுத்தி அச்சு பதித்து டிசைனை உருவமாக மாற்றி அழகுபடுத்தலாம். காசை வைத்து அதன் மேல் பேப்பர் ஒன்றை வைத்து பென்சிலால் தேய்த்து விளையாடும் தேய்த்தால் தெரியும் உருவம் சொல்லி கொடுக்கலாம்.

உண்டியல்

சேமிப்பு இன்றைய காலகட்டத்தில் மிக அத்தியாவசியமான ஒன்று. குழந்தைகளை அவர்கள் கையாலேயே ஐஸ் க்ரீம்டப்பா மற்றும் ஜீஸ் பாட்டல் போன்றவற்றை கொண்டு உண்டியல் செய்ய வையுங்கள். அவர்கள் செய்த உண்டியலில் அவர்களே ஆசையாக பணம் சேமிப்பார்கள். கடைகளுக்கு செல்லும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் கையாலேயே பட்ஜெட் எழுதச்சொல்லுங்கள்.

சமைக்க கற்றுக்கொடுங்கள்

ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையானாலும் இன்றைக்கு சமையல் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். சமையல் என்பது ஒரு கலைதான். அதை குழந்தை பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுக்கலாம். சமையல் அறையில் உள்ள சாமான்கள் அவற்றின் பயன்களை கூறி எந்தப் பொருளை எப்படி சமைக்க பயன்படுத்தலாம் என்பதை கற்றுக்கொடுக்கலாம். வித்தியாசமான உணவுகளை அவர்களை செய்யச்சொல்லி பாராட்டலாம்.

கற்பனை சக்தி

வீடுகளில் இருக்கும் தேவையற்ற காலண்டர் அட்டைகளை பெட்டிகளாக செய்யச் சொல்லுங்கள். அவற்றை பலவிதமான பெட்டிகள்,கட்டங்கள், வண்டிகள்,வீடுகள் போன்றவற்றை செய்து உங்கள் குட்டீஸ் உங்களை அசத்துவார்கள்.

செய்தித்தாள்களில் ராக்கெட், விமானம் போன்றவைகளை செய்தும் அசத்துவார்கள். அவற்றை வீடுகளில் அலங்காரமாக மாட்டிவையுங்கள்.

குழந்தைகளின் படைப்புகள் தினமும் இடம் பெறும் வகையில் நோட்டீஸ் போர்டு போன்ற தெர்மாக்கோல் ஒன்று வாங்கி கொடுத்து அவர்களது படைப்புகளை இடம்பெறச்செய்யுங்கள்

பயனுள்ள விளையாட்டுக்கள்

நமக்கு தெரிந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். விடுமுறை காலத்தில் குழந்தைகள் சென்று வந்த இடங்கள் அதன் சிறப்பு வரலாறுகள் போன்றவற்றை எழுத கற்றுக்கொடுங்கள்.. நோட்டு புத்தகங்கள் போன்றவற்றிற்கு அட்டை போட கற்றுக் கொடுங்கள். கிழிந்த புத்தகங்களை ஒட்ட கற்றுக்கொடுங்கள். இவ்வாறு பயனுள்ள வகையில் விடுமுறையை கழிக்க கற்றுக்கொடுப்பதன் மூலம் எப்பொழுதும் டிவி, கம்யூட்டர் என்று பொழுது போக்குவது தடுக்கப்படும் என்கின்றனர் குழந்தை நல நிபுணர்கள்.
Top of Form
Bottom of Form


No comments: