Monday, November 14, 2011

போராட்டக் களம்

போராட்டக் களமாக மாறிக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. மக்கள் பலம் இழந்து போன கட்சிகள், தத்துவ பலம் மக்கள் பலம் இரண்டுமே இல்லாத இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து போன ஏதும் செய்ய இயலாத தலைவர்கள், மேடைப் பேச்சிலேயே புரட்சியைக் கொண்டு வந்து விடலாம் என என்னும் செந்தமிழர்கள் மற்றும் கற்பனைவாதிகள், மக்களே போராடுங்கள் என்று அறைகூவுவதும் மக்கள் திரண்டு விட்டாலோ அல்லது திரண்டு போராடும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைக்க முயலும் துரோகிகள். இப்படித்தான் தமிழக அரசியல் சூழ்நிலை நமக்கு தோற்றமளித்தது.

ஆனால் வரலாறு மக்களின் மீது இடையறாத நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனென்றால் வரலாற்றை படைப்பவர்கள் மக்கள் என்பதால். ஈழமக்களின் துயர் தமிழ்நாட்டு மக்களையும் வாட்டி வருவதால் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை எங்கும் காண முடிந்தது. இந்த போராட்டமானது சானல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டதும், அது உலக நாடுகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்து அதனை மிகப்பெரிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வலுவாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இராசபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானமும் சேர்ந்துக்கொள்ளவே வெகு மக்களின் ஆதரவும் கணிசமான அளவுக்கு கிடைக்கவே தமிழ்நாடு முழுவதும் அந்த போராட்ட அலை பரவ துவங்கியது. ஆவணப்படத்தை மக்கள் முன் திரையிடப்பட்டதும் அதனை நகல் எடுத்து பெரும்பாலான வீடுகளில் வினியோகித்தும் தொடர் பிரச்சாரமும், பரப்புரையும் பரவலாயிற்று. இதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு மக்கள் மத்தியிலே தொடர்ந்து பெருகலாயிற்று. பல இடங்களில் பட்டினிப்போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் என்று பல திசைகளில் மேலும் மேலும் மக்களிடையே விழிப்பினை ஏற்படுத்திய போராட்டம் தொடங்கியது.

இந்த எழுச்சியினையும், ஆளும் நடுவண் அரசின் மீது தொடர்ந்து அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டினையும் ஒரு சேர குலைக்கவும், கலைக்கவும், அவர்களுக்கு கிடைத்த நபர்தான் அன்னா அசாரே. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் தில்லியில் திரண்ட கூட்டம், மற்ற அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளியது. ஊடகங்கள், இந்திய அளவிலான கட்சிகள், சமூக ஆர்வளர்கள் அனைவரும் அதனை முக்கியத்துவம் உள்ளதாக சித்தரித்ததால் மற்ற பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. நாடளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருந்த இலங்கை இனப்படுகொலை பிரச்சனை மறக்கடிக்கப்பட்டது, நேரம் ஒதுக்கமுடியாது என்று மறுக்கப்பட்டது. அன்னா அசாரேவின் பட்டினிப்போராட்டத்திற்கு ஆதரவு அதிகரிக்கவே, சமாதானத்திற்கு இறங்கிய நடுவண் அரசு ஒரு சில வாக்குறுதிகளுடன் அதனை முடிவுக்கு கொண்டுவரவே, போராடிய கூட்டம் ஊழலையே ஒழித்துவிட்டது போல வெற்றி விழா கொண்டாடியது.

சட்டங்களின் மூலம் ஊழலை ஒழிக்க முடியாது என்பது தெளிவு. மேலும் இது முதன்மை அமைச்சர், நீதிபதிகள் போன்றவர்களை இந்த சட்டவரம்பிற்குள் கொண்டு வருவதனை மட்டுமே நோக்கமாக கொண்டது. இவர்கள் நீங்கலாக மற்ற அனைவருக்கும் ஊழல் செய்தால் தண்டனை வழங்கும் சட்டங்கள் நிறைய இருக்கின்றன. அவை எல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தினால் அதிகார ஆளும் வர்க்கம் நினைத்தது நன்கு நிறைவேறியது.

அதுதான் நடுவண் அரசின் தொடர் ஊழல் பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காமல் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில், ஊழலுக்கு தீர்வு கண்டுவிட்டது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியது. தொடர் ஊழல்களால் நடுவண் அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்த மக்களின் உணர்வு நிலை இந்த போராட்டத்திற்கு பின்னர் நியாயம் கிடைத்து விட்டது போன்ற உணர்வு நிலைக்கு மாறி அரசின் மீது இருந்த அழுத்தம் குறைந்து போனது.

அன்னா அசாரே பெருவெற்றி பெற்றவராகவும், நடுவண் அரசு தொல்லையிலிருந்து விடுபட்டதாகவும் நிலை தோற்றமளித்தது. ஆனால் ஊழல்களும், எல்லா ஊழல்வாதிகளும் தண்டிக்கப்படாமலும், சுதந்திரமாகவும் உலா வந்துக்கொண்டுதான் இருக்கின்றன, இருக்கின்றார்கள். மக்களின் போராட்ட வலுவை, கிளர்ச்சி மனோபாவத்தை அரசு திட்டமிட்டு குலைப்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

தமிழ்நாட்டிலே அன்னா அசாரேவின் பட்டினிப்போராட்ட நாடகம் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்த திகைத்துப்போன நடுவண் அரசு, இனப்படுகொலை தொடர்பான போராட்ட அழுத்தங்கள் அதிகரிக்கவே, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனைக்கான கருணை மனுவை குடியரசுத் தலைவரை விட்டு நிராகரிக்க செய்ததுடன், தூக்குத்தண்டனையை நிறைவேற்ற நாளும் குறித்தது.

ஏற்கனவே இனப்படுகொலைக்கு எதிரான போரில் உணர்வு பெற்றிருந்த தமிழ்நாடு தனது போராட்ட பலத்தை மரணதண்டனைக்கு எதிராக திருப்பியது. போராட்டம் அனைத்து திசைகளிலும் உருவெடுக்கவே, சென்னையில் மூன்று பெண் வழக்கறிஞர்கள் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டது முக்கிய நிகழ்வாய் மாறியது.

நீதிமன்றத்தில் துவங்கப்பட்ட பட்டினிப்போராட்டம் பின்னர் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. பட்டினிப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது. அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒன்று சேர்ந்து பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தின. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள், பேரணிகள், பட்டினிப்போராட்டங்கள், கருத்தரங்கள் மற்றும் மனித சங்கிலிகள் நடைபெற்றன. இது பரவலாக மக்களை ஒரு விவாதத்திற்கும், அந்த விவாதத்தை தொடர்ந்து விழிப்புணர்விற்கும் இட்டுச் சென்றது.

அதே சமயத்தில் கட்சிகளின், இயக்கங்களின் இயலாமையும், செயலின்மையும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வலுவான போராட்டத்தினை முன்னெடுக்கவோ ஒருங்கிணைக்கவோ வலுவின்றி கருத்து போர்களை மட்டுமே நம்பியும், தமிழக அரசினை அதிக அளவில் நம்பியும், எதிர்பார்த்தும் இருந்தனர். சட்டத்திற்குட்பட்ட தமிழக அரசு ஆட்சிக்கு தீங்கு இழைக்காத கோபப்படுத்தாத வழிமுறைகளை தேர்ந்தெடுத்து அதனை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தனர், இந்த தலைவர்கள் மற்றும் இயக்கங்கள்.

உருவாகி வந்த போராட்ட சூழ்நிலையையும், அதனை பயன்படுத்தி முன்னேற முடியாமல் இருந்த தேக்க நிலையையும் கண்டுதான் கிளம்பினால் செங்கொடி.. தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது முத்துக்குமாரின் ஈகம். அப்படி ஒரு ஈகமே இந்த தேக்க நிலையையும் உடைக்க வல்லது என்று கருதிய, உணர்ந்த அந்த புரட்சிக்கொடி தன் உயிரையே ஈகம் செய்தாள். செங்கொடியின் ஈகம் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. அந்த சிறிய பெண்ணுக்கு இருந்த நெஞ்சுரம், துணிவு அனைவரையும் வெட்கப்பட வைத்தது. போராட்டக் கனல் தமிழ்நாட்டிலே பரவத் துவங்கியது. அது அனைத்து தரப்பினரையும் உலுக்கியெடுத்தது.

ஓர் உயிரின் மதிப்பு ஒப்பற்றது தான் ஆனால் தன் உயிரையும் விட ஒப்பற்றது போராட்டம் என்று நன்கு உணர்ந்தவள் தான் செங்கொடி. தான் உணர்ந்ததை உலகுக்கு காட்டியும் சென்றாள் அவள். அந்த ஈகத்தின் எதிரொலியாக கிளம்பிய போராட்ட வேகம் விரைவில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துசெய்ய கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற செய்தது.

மக்களின் போராட்ட்த்திற்கு கிடைத்த இரண்டாவது தீர்மானம் வெற்றியாகும் இது.

ஆனால் இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தோமேயானால் செங்கொடியின் தியாகம் நமக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து சென்று வலுவாக போராட எந்த இயக்கமும் தகுதியாக இல்லை என்பதும், உருவாகி வரும் மக்கள் போராட்டத்தினை ஒருங்கிணைக்கும் அளவுக்கு யாருக்கும் யாருக்கும் பலமில்லை என்பதும் மேடைகளிலே பேசுபவர்களை நம்பி பயனில்லை என்பதும் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலை செய்யப்படும் போது, சிறைகளில் தூக்கு கொட்டடியில் துன்புறும் போது அவர்களை விடுவிக்க எந்த முறையினாலும் முடியாது என்ற நிலைக்கு வரும்பொழுதுதான் தன்னை தியாகம் செய்து கொள்ளும் அளவுக்கு செல்லும் இந்த போராளிகளின் இழப்பிற்கு இன்று சமூகத்தில் நிலவும் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளே பொறுப்பானவர்கள்.

தானும் இணைந்து போராட தகுதியான சரியான அமைப்பை இளைஞர்கள் தேடும்போது அங்கே வெற்றிடம் மட்டுமே இருப்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஒரு சில அல்லது பல இளைஞர்கள் மேடை பேச்சினை நம்பி ஏமாந்து போகின்றனர்.

இது போன்ற நிலை நீடிப்பதானது இயக்கங்கள், மக்கள் ஆதரவு இழந்து வெறும் பகட்டு பொருளாக உலவி வருவதுதான் காரணமாக இருக்கிறது. அறைக்குள் இருந்து போராடுவதும், காகிதங்களிலேயே புரட்சி நடத்துவதும், கருத்தியல் போராட்டம் என்ற பெயரிலே தனி நபர் தூற்றலும், இளைஞர்களை சீரழிப்பதுமே இயக்கங்களின் நடைமுறையாக இருந்து வருகிறது.

முத்துக்குமார், செங்கொடி போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் இங்கே உண்டு. அவர்கள் இனி யாரையும் நம்பாது தங்கள் மீது உள்ள பொறுப்பினை உணர்ந்து துணிவோடு இந்த சமூகத்தின் இடையூறுகளை களைய போராட வேண்டும். உயிர்த்தியாகம் போதும், உயிரோடு இருந்து, ஈகம் செய்த பலரின் கனவுகளை நினைவாக்க உறுதி எடுத்துக் கொள்வதே சரியான முறையாகும்.

மக்களின் போராட்ட வலுவின் காரணமாக தமிழக அரசு தொடர்ந்து தீர்மானம் இயற்றி வந்தாலும் அந்த தீர்மானங்களால் எந்த விடிவும் வரவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கும் அதே வேளையில் அது போராட்ட உணர்வினை மழுங்கடிப்பதாகவும் வினை புரிகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் மக்களின் தொடர் போராட்டமே தீர்வினை பெற்றுத்தரும் என்பதை விடுத்து நன்றிக்கூட்டங்களும், வெற்றிக் கூட்டங்களும் நடத்துவதிலே இன்பம் காண்பதை சில அமைப்புகள் திட்டமாக வைத்துள்ளன. மேலும் தமிழக அரசின் உண்மை முகத்தை அறியாமல் அல்லது அறிந்துக் கொண்டே அதனை புகழ்வதை, அதனை அண்டி இருப்பதை பெரும்பாலான அமைப்புகள் விரும்புவதையும் காண்கிறோம்.

இச்சூழலில்தான் தமிழக அரசு தனக்கேயுரிய நயவஞ்சக முகத்தினை பரமக்குடி துப்பாக்கிச் சூட்டினால் தெளிவாக காண்பித்தது.

தமிழக அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க தலைமை தன் ஆதிக்க சாதி வெறியினை 7 பேரின் உயிரினை பலி கொண்டதன் மூலம் அதன் உண்மை முகத்தினை உலகுக்கு காண்பித்தது.

ஈழத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களின், தமிழ்நாட்டு சிறையில் இருக்கும் மூவரின் உயிரினை நாம் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த வேளையில் மிகவும் எளிதாக 7 அப்பாவிகளின் உயிரை பறித்து தன் ஆதிக்க சாதி வெறியை நிலை நிறுத்தியது தமிழக அரசு.

அதுவரை இருந்த மாயை உடைந்து சின்னா பின்னமாகி போனது. தமிழ்நாட்டில் உருவாகி வந்த ஒரு ஒற்றுமையினை குலைப்பதோடு அதே வேளையில் எழுச்சி பெற்று வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட உணர்வினை சிதைக்கும் வகையில் தொடுக்கப்பட்ட வெறிச் செயலே இது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு வருகை புரிந்தவர்களை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதோடு ஒரு கலவரத்திற்கும் காரணமாக அமைந்தது தமிழக காவல்துறை. துப்பாக்கிச் சூட்டிற்கான அவசியமே இல்லாத போதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை போன்ற பல இடங்களில் தேவையே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்களை பலி வாங்கியும் பலரை படுகாயப்படுத்தியும் தன் வக்கிர எண்ணத்தை காண்பித்தது தமிழக காவல்துறையும், தமிழக அரசும்.

அதுவரை முற்போக்காளர் சட்டை போட்டுக்கொண்டு திரிந்த பலரும் அம்பலப்பட்டு போயினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெயரளவில் ஒரு கண்டனத்தை தெரிவித்துவிட்டு, சில பேர் அதையும் கூட தெரிவிக்காமல் நடந்துக் கொண்டது தமிழக அரசியல் சூழலையும் அதில் நிரம்பியிருக்கும் சாதி வெறியையும் வெளிப்படையாக காண்பித்தது.

எப்பொழுதும் போல் செங்கொடி விடயத்தில் எப்படி அந்த புரட்சிப்பெண்ணின் ஈகத்தை திசைத்திருப்ப முயன்றதோ அதே போல் இந்த கலவரத்திற்கான காரணத்தையும், 7 உயிர்கள் பறிக்கப்பட்டதற்கான காரணத்தையும் திரித்துக்கூற துவங்கினர். உச்சக்கட்டமாக தமிழக அரசு, கலவரக்காரர்கள் முத்துராமலிங்கத்தின் பெயரை இழிவாக எழுதியதால் தான் கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிற அநியாயமான தகவலை சட்டபேரவையில் வெளியிட்டபோது ஆதிக்க சாதி வெறி வெட்ட வெளிச்சமானது.

அமைதியாக நடக்க வேண்டி இருந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலி தேவையில்லாமல் அந்த சமுதாய தலைவர்களில் ஒருவரை தடுத்ததன் மூலம் கலவரத்தை துவக்கி வைத்த காவல்துறையும், தமிழக அரசும் தான் இதில் குற்றவாளிகள். இதனை வெளிப்படையாக கூறாத எவரும் மக்கள் விரோதிகளே.

மேலும் தான் தோன்றித்தனத்தால் 7 உயிர்களை பலிவாங்கியப்பின் அதனை சாதி மோதலாக விளக்கம் சொன்ன செயலலிதா, இந்த தமிழ்நாட்டை அமைதியாக விட்டு வைக்க போவதில்லை. உருவாகி வரும் நல்ல சூழல்களை கூட குழப்பி சாதி, மத மோதல்களாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் இந்த செயலலிதாவும், செயலலிதாவை சார்ந்தவர்களும் இந்த தமிழ்நாட்டின் மிகப்பெரிய துரோகிகளே.

இதனை உணராமல் பல கற்பிதங்களையும், மாயைகளையும் உருவாக்கி வளர்த்து வருபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

மேலும் இந்த பரமக்குடி கலவரத்தின் போதும் துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்கள் வீழ்ந்த போதும் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலையாமல் உறுதியாக இருந்ததுதான் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் போராடும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுத்த சம்மட்டி அடி. வீழ்ச்சிகளில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள முடியும், சோதனைகளில் இருந்தே சாதிக்க கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கிணங்க சாவைக் கண்டும் அஞ்சாமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் துப்பாக்கிகளுக்கு எதிராக நெஞ்சுரம் காட்டி போராடியது நடந்த சோகத்திலும் மக்களில் வலிமையினைக் காட்டுவதாக அமைகிறது. இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சுரமும், துணிவும், போராடும் ஆற்றலும் எந்த கொடுங்கோல் அரசினையும் வீழ்த்தவல்லது.

துப்பாக்கிச்சூடு நடத்தி 7 உயிர்களை கொன்றதோடு விட்டதா? தமிழக அரசு, கைது செய்கிறேன் என்று இறங்கி 1000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தும், மேலும் இரண்டு பேர் கொல்லப்பட காரணமாகவும் இருக்கிறது, வகை தொகையின்றி அனைவரும் கைது செய்யப்பட அந்த பரமக்குடி பகுதி மக்கள் தொடர்ந்து இன்றைக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எந்த இயக்கத்தையும் அமைப்பையும் காணோம்.

அந்த சமுதாயத்தை சார்ந்த தலைவர்களே அதைப்பற்றி பெரிதும் கவலைப்படாமல் உலவி வருவதுதான் அதனினும் கொடுமை. ஆனால் இந்த இழி போக்குக்கெல்லாம் தீர்வு தருவதாவது அந்த மக்களின் சொந்த போராட்டமே. ஒடுக்கு முறைக்கு எதிராக போராட களத்தில் நிற்கும் மக்களிடையே இருந்துதான் உண்மையான தலைவன் உருவாகி வர முடியும். அந்த எண்ணத்தை உள்வாங்கி கொண்டு ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் அனைத்து மக்களும் உறுதியோடு போராட வேண்டும். ஒடுக்கப்படும் இனத்திற்கு ஆதரவாக மற்றவர்களும் இணைந்து போராட முன் வரவேண்டும்.

இதே வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிராக உருவான போராட்டம் ஒரு திருப்பு முனையாகும்.

உலக அளவில் அணு உலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கையில், பெரும்பாலான அய்ரோப்பி நாடுகள் மற்றும் முன்னேறிய நாடுகள் அணு உலைகளை தங்கள் நாட்டிலிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிடுக்கையில், ஏன் இந்தியாவில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் கூட அணு உலைகளை தங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது என்று அதற்கெதிராக போராடிக் கொண்டிருக்கையில், தமிழக அரசு மட்டும் வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம்தான் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக வேலைகள் நடந்து வந்த அத்திட்டம் இப்போது இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில்தான் மக்கள் அதனை மூடக்கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

துவக்கத்தில் வராத எதிர்ப்பு ஏன் இப்போது வருகிறது என்றெல்லாம் கேட்கப்படுகின்றன? துவக்கத்தில் எதிர்ப்பு வரவில்லை என்று யார் சொன்னார்கள்? கூடங்குளத்தில் அணுமின் நிலையம் வரக்கூடாது என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்கள் போராட்டத்தை குலைத்தது தமிழக அரசு. தொடர்ச்சியாக பல சூழ்ச்சிகளைக் கையாண்டு அந்த பகுதி மக்களுக்கு பல பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, வேலை வாய்ப்புகள் ஆசைக்காட்டி தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டது அரசு.

உலக அளவில் பரவிவரும் விழிப்புணர்ச்சியும், சமீபத்தில் யப்பான் புகுசிமாவில் உள்ள அணு உலையில் சுனாமி புகுந்ததால் அந்த அணு உலையிலிருந்து வெளியான கதிரியக்கம் பரவி பல்லாயிரக் கணக்கானோரை பலி கொண்டது. தொழில்நுட்பத்தில் வளர்ந்து விளங்கும் முன்னேறிய நாடான யப்பானாலேயே இத்தகைய விபத்தை சமாளிக்க முடியாமல் போனது உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மிகச்சிறந்த நிர்வாகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்றவைகளை கொண்ட யப்பானாலாயே சமாளிக்க முடியாத பேரழிவுக்குப் பிறகும், இந்தியா போன்ற நாடுகள் அணு உலைகளை நாடுவது மக்கள் விரோத போக்கே ஆகும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் சோதனை ஓட்டத்திற்காக தயாரான போது மக்களிடம் கடும் அதிருப்தி தோன்றியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எனக் கூறிக் கொண்டு விபத்து ஏற்பட்டால் வெளியேறுவது எப்படி என்றும், அணுக்கரியக்க வீரியத்தை குறைப்பதற்கு எனக்கூறி மாத்திரைகளை மக்கள் மத்தியில் வழங்கத் துவங்க எத்தணித்த பின்தான் ஏற்கனவே எதிர்ப்பு மனோநிலையில் இருந்த மக்கள், போராட்டத்திற்கு அணியமானார்கள்.

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தக்கரை என்னும் கிராமம்தான் இந்த போராட்டத்திற்கு வித்திட்டது. மீனவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த கிராமம்தான் அணு உலைக்கு எதிரான போரில் கச்சைக் கட்டிக்கொண்டு போராடியது. இடிந்தகரை மக்களுடன் கூடங்குளம் மக்களும் சேரவே போராட்ட வலு இன்னமும் கூடியது. போராட்டத்திற்கு திரண்ட மக்கள் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே போனதுகண்டு விரைவில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் எல்லா இடங்களிலும் போராட்டம் பரவியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் பரவவே தமிழக அரசு பேச்சுவார்த்தையை துவக்கியது. பட்டினிப்போராட்டம் துவங்கியபோது தன்னால் ஏதும் செய்ய இயலாது என்றும், அணு உலை மிகவும் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறது என்றும் தமிழக அரசு அறிக்கை விட்டது. அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தன்னுடைய போராட்டத்தை அயராது தொடர்ந்து 127 பேர் பட்டினிப்போராட்டம் இருக்க, பள்ளிகள் கல்லூரிகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க கூடியிருந்த மக்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தையும் தொட்டது.

தமிழ்நாட்டு அரசியல் சூழல் வேறு பல காரணங்களால் திசை திருப்பப்பட்டு இருந்ததால் கூடங்குளம் போராட்டம் தன் கவனத்தை சிதற விடாமல் முன்னேறியது. எந்த வித ஆசைக் காட்டலுக்கும் சளைக்காத மயங்காத போராட்டக்குழு மக்களின் போராட்ட வலுவை உரப்படுத்தியது. போராட்டத்தின் உக்கிரம் வெளிப்பட துவங்கவே ஊடகத்தின் கவனமும் அனைத்து தரப்பினரின் ஆதரவும் போராட்டத்திற்கு துணையாக களமிறங்கினர்.

இதற்கிடையில் அணு உலை பாதுகாப்பானது மக்கள் அறியாமையினால் போராட்டம் நடத்துகிறார்கள். கடல் மட்டத்திற்கு மீது 7 மீட்டர் உயரத்தில் இருப்பதால் சுனாமியோ நிலநடுக்கமோ தாக்காது, 13000 கோடி ரூபாய் செலவளித்தாகி விட்டது, இப்போது எப்படி கைவிட முடியும், மக்கள் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று சில கட்சிகளும், பல அறிவு ஜீவிகளும், அதிகார ஆளும் வர்க்கத்தின் முகவர்களான ஊடகங்களும் தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால் அறிவும் திறனும் இவர்களுக்கு மட்டும்தான் சொந்தம், மற்றவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது என்று எண்ணிவிட்டனர் போலும்.

ஆபத்து காலத்தில் அணு உலை பாதுகாப்பையும் தாண்டி, அணு உலை மின் தயாரிப்பில் இருக்கும் பொழுது அது வெளிப்படுத்தும் கதிரியக்கம், மின்னாற்றல் உருவாக்கத்தின் போது உருவாகும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பிரச்சனையைத்தான் மக்கள் முதன்மைப்படுத்தி போராடுகிறார்கள்.

முன்னேறிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூற்றுகளின் படி, அந்நாடுகள் தங்கள் அணு உலையை மூடுவதற்கு நாள் குறித்து மூடியும் வருகின்றனர். உலகின் மின் தேவையில் 4 சதம் மட்டுமே தரும் அணு உலைகள் கோரும் பொருட்செலவும் அது ஏற்படுத்தும் பாதிப்பும் மிக அதிகம். மக்களை விலையாக கொடுத்து மின்னாற்றல் உருவாக்கும் திட்டத்தை, சுற்று சூழலையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கெடுத்து மின்னாற்றல் உருவாக்கும் திட்டத்தை மூடுவதுதான் சரியானது என்று உலகம் முழுவதும் எண்ணுகின்ற அதே வேளையில், அந்த முன்னேறிய நாடுகள், தாம் பணம் சம்பாதிக்க வளர்ந்து வரும் நாடுகளின் தலையில் தான் மூடிய அணு உலைகளை கட்டுவதுடன் பெரும் பணம் ஈட்டவும் செய்கிறது. அந்நாடுகள் தரும் இழிவான பிச்சைக்காசுக்காக வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார ஆளும் வர்க்கங்களும் அவர்களது ஏவலாளாக நின்று தங்கள் மக்களை கொன்றேனும் அக்காசினை சம்பாதிக்க அனைத்து இழி செயல்களிலும் இறங்குகின்றனர். அதனால்தான் மக்களை பற்றி துளியேனும் கவலைப்படாமல் இது போன்ற திட்டங்களை ஆதரிக்கவும், அமல்படுத்தவும் கடும் பிரயத்தனம் புரிகிறார்கள்.

இவர்களது எல்லா புரட்டுகளையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதுதான் இன்று நமக்கு மிகவும் சாதகமான சூழலாக இருக்கிறது. இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கும், செய்யும் சூழ்ச்சிகளுக்கும் ஆட்படாமல் மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க உறுதியுடன் உள்ளனர் என்பதுதான் ஊக்கமான விடயமாக உள்ளது.

அவ்வகையிலேயே இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிரான போராட்டம் வலுப்பெற்றது. 10 இலட்சம் மக்களின் வாழ்வு பாதிக்கப்படுவது, கடலையே நம்பி தொழில் நடத்தும் மீனவர்கள் வாழ்க்கை அழிக்கப்படுவது, கடல் வளம் முற்றிலும் நாசமாக்கப்படுவது, நீராதாரங்கள் முற்றிலும் நிர்மூலாக்கப்படுவது, கதிரியக்கத்தால் பல நோய்கள் பரவுவது மக்கள் நீண்ட காலமாக வாழும் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுவது, கடலுக்குள் பாதுகாப்பு என்ற பெயரில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிப்பது, இன்னும் பல ஆபத்துகள் இந்த அணுமின் நிலையத்தினால் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் அணு உலையை மூடுவதற்கும் இனிமேல் எந்த அணு உலையும் அமைக்க்க் கூடாது என்பதுமே நமது போராட்டமாக அமைய வேண்டும்.

இந்நிலையில் அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் தன் பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. 127 பேர் பட்டினிப்போராட்டம், 40000 மக்களுக்கு மேல் பங்கேற்றமை மாநில அரசினை உலுக்கியது. முதலில் முரண்டு பிடித்த அரசு பின்னர் இறங்கிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நடந்த மற்ற போராட்டங்களை காட்டிலும் இந்த போராட்டத்திற்கு சில சிறப்புக் கூறுகள் உள்ளன. அதாவது போராட்டக்குழு மாநில அரசுடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்க விருப்பமில்லாமல் இருந்தது. ஏனென்றால் நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையம் குறித்து மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்பது தெளிவு. மேலும் தமிழக அரசு முன்னுக்குப்பின் முரணாகவும் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்கையுமே தெரிவித்து வந்தது. இருந்தாலும் நடுவண் அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசின் உதவியையும் கைக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தப்பின் அதாவது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை மாநில அரசு ஆதரித்தால் மட்டுமே அதன் ஆதரவு கோருவது இல்லையென்றால் போராட்டத்தை தொடர்ந்து எடுத்து செல்வது என்று போராட்டக்குழுவினர் முடிவெடுத்தனர்.

நான் எல்லோருக்கும் ஒன்று தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்தப் போராட்டம் அரசு அனுமதி இல்லாமல் நடந்த போராட்டம். இது சட்டத்திற்குட்பட்ட போராட்டம் அல்ல அதே போல சட்ட விரோத போராட்டம் அல்ல, ஆனால் பெருந்திரளான மக்கள் பங்கேற்ற சனநாயகப் போராட்டம். தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு, எல்லா வழிகளிலும் போராடுவதற்கு மக்களுக்கு வலிமை உண்டு, அதில் இதுவும் ஒரு வகை.

பெருந்திரளான மக்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பிருந்தால் எந்தப் போராட்டமும் வெல்லும். அரசிடம் நாம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. எந்த திட்டத்தையும் இயற்ற அரசுதான் நம்மிடம் அனுமதி கேட்க வேண்டும்.

அனுமதி வாங்காமல் போராடக் கூடாது. அமைதி கிடைக்காமல் போராடக் கூடாது, அனுமதியை மீறினால் கைது செய்யப்படுவோம் என்ற அச்ச உணர்வில் அரசியல் செய்ய விரும்புவதை விட அவரவர் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

போராடும் விடயத்தில் நியாயம் இருக்கும்போது அந்த போராட்டத்திற்காக உயிரையும் கொடுப்பவர்கள் உன்னத வீரர்கள். இங்கே அனைவரையும் உன்னத வீரர்களாக கேட்கவில்லை. குறைந்தபட்சம் வீரர்களாகவாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் இந்த அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியவுடன் வெற்றிவிழா கொண்டாட போய்விடவில்லை. அவர்கள் பின்விளைவுகளில் தெளிவாக இருக்கிறார்கள். இது நடுவண் அரசு முடிவெடுக்க வேண்டிய விடயம், அதனால் நடுவண் அரசினை நோக்கி போராடவும் தயாரிப்பு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் நம்மில் பலரோ இலங்கை மீது பொருளாதாரத் தடை, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் இயற்றியப் பின்னர் ஏதோ ஈழமக்களுக்கு வாழ்வு கிடைத்துவிட்டது போலவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டது போலவும், வெற்றிவிழாவும் நன்றி அறிவிப்பு கூட்டங்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இது கால் பிடிக்கும் செயலே அன்றி வேறு இல்லை என்பது தெளிவு.

மூவருக்கு தூக்குத்தண்டனை என்று அறிவித்த போது எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தியதை நான் இதுகாறும் குறிப்பிட மறந்துவிட்டேன். இன்னும் மாணவர்களிடம் வீரம் நிறைந்துதான் இருக்கிறது. இந்த சதிகார நடுவண், மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் இந்த போராட்ட உணர்வும் பறந்துபட்ட மக்கள் நடுவில் பரவத்தான் செய்யும்.

இன்றைய தமிழ்நாடு முழுவதும் ஒரு போராட்ட சூழல் பரவலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சூழல், பல்வேறு பிரச்சனைகள் ஆனால் போராடும் மக்களிடம் இளைஞர்களிடம் ஒரு ஓர்மை, தெளிவு, புலப்படுகிறது. போராடும் மக்களிடையேதான் நெஞ்சுரம், துணிவு, ஆற்றல் போன்ற பல தகுதிகள் வெளிப்படுகிறது. மூன்று உயிரை காக்கத் தன்னையே தியாகம் செய்த புரட்சிப்பெண் செங்கொடி, தன் உயிரை மதியாமல் தொடர்வண்டி மறியல் நடத்திய மாணவர்கள், சாதிவெறியின் பொருட்டு தன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரும் கலையாமல் போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள், உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து விளைவிக்கும் அணுமின் நிலையத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் நிற்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள், அரசு ஆதரவு இல்லாவிட்டாலும் அரசு கடும் ஒடுக்குமுறையை ஏவினாலும், அரசு கடும் சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் இந்த மக்கள் வெளிப்படுத்தும் உறுதி, தமிழ்ச்சமூகம் தன் போராட்ட குணத்தை ஆற்றலை வெளிப்படுத்தும், பரவலாக வெளிப்படுத்தும் காலமாக இது விளங்கி வருகிறது.

இத்தகைய மக்களை கொண்டு நமக்கு இடர் விளைவிக்க எத்தனிக்கும், விளைவித்து கொண்டிருக்கும் அனைத்து எதிரிகளையும் எதிர்த்து போராட தயாராவோம். மக்கள் பலமே முடிவினை தீர்மானிக்கும் பலம், மக்கள் பலத்தினை பெருக்கி கொள்வதோடு இன்று மக்களிடையே வெளிப்படும் சிறந்த குணங்களான கொள்கை உறுதி, கொள்கை தெளிவு, விடாமுயற்சி, பணியாதிருத்தல், துரோகத்திற்கு அஞ்சாமை, போராட்டத்துணிவு போன்ற குணங்களை தலைவர்களும் உள்வாங்க வேண்டும். அப்போது தான் அந்த போராட்டத்திற்கான தலைமையும் சரியானதாக இருக்க முடியும்.

மக்கள் நீங்கிய தலைவனும், தலைவன் இல்லாத மக்களும் திசை தெரியாத கப்பலை போன்றவர்களே. அதனால் இன்று கூட்டுறவின் பலத்தினை உணர்ந்து அதனை செம்மைப்படுத்தி போராட்டத்தின் மூலம் மட்டுமே மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற முற்று முழுதான தெளிவோடு போராட அனைவரும் முன்வர வேண்டும் என்பதே நம் லட்சியத்தினை அடைவதற்கான வழி. போராட்ட வழியின் மூலம் மட்டுமே உரிமைகளை பெற முடியும். உரிமைகளை பெறுவதன் மூலம் மட்டுமே நாம் சுதந்திரமாக வாழ முடியும். சுதந்திரமாக இருந்தால் மட்டுமே சமூகம் வளர்ச்சியுறும். சமூகம் வளர்ச்சியுற இப்போது உருவாகி வரும் இந்த போராட்ட களத்தில் அனைவருக்கும் பொறுப்புண்டு. அதனை அனைவரும் உணர்ந்தால் நம் லட்சியங்களை அடையும் நாட்கள் அதிக தொலைவில் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாட்டில் நிலவும் இந்த போராட்ட கனல் தொடர்ந்து பரவச் செய்வோம், அதில் நாமும் ஓர் அங்கமாவோம், விடாப்பிடியாக தொடர்ந்து போராடுவோம், வெல்வோம்.

No comments: