Friday, June 24, 2011

30 நாட்களில் பாடலாசிரியர் ஆவதெப்படி..?

1. முதலில் ஒரு பாடலாசிரியருக்கான தகுதிகளை தெரிந்துகொள்ளுங்கள். இயல்பாகவே நீங்கள் அர்த்தம் இல்லாமல் பேசுபவராக, எதையும் எதனுடனும் முடிச்சு போடத் தெரிந்தவராக, மொழிகொலையில் கைத்தேர்ந்தவராக இருந்தால், நுழைவுத் தேர்வில் உங்களுக்கு 100 மதிப்பெண்.

2. சிச்சுவேஷனுக்கு சம்பந்தமேயில்லாமல் உளறவும், கிறுக்கவும், பிறர் பாடல்களிலிருந்து வார்த்தைகளைப் பொறுக்கவும் நிபுணத்துவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதி. இத்துடன் பிறமொழி வார்த்தைகளைக் கலக்கி காக்டெய்ல் செய்யக் கற்றுக்கொண்டால், நீங்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதியானவர்.

3. சிரங்கும் நமைச்சலும் எப்படி இணை பிரியாதிருக்குமோ, அப்படித்தான் எதுகை-மோனையும் தமிழ் பாடலும். இவை இல்லாமல் பாடல் இல்லை. பொன்மேனி உருகுதே; என்னாசைப் பெருகுதே; ஏதேதோ நினைவு தோன்றுதே; எங்கேயோ இதயம் போகுதே என்றும், ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என ‘காது’ குளிர எழுதுவதே எதுகை. உங்கள் முதல் பாடலைக் கேட்டு, யாராவது தூ..தூ… என துப்பினாலோ, விமர்சன சேற்றை அப்பினாலோ துவண்டுவிட வேண்டாம். இன்றைய எச்சில் மழை, நாளையப் பண மழை, பாராட்டு மழை.

4. பாடலை எழுதுவதற்கு முன், உங்கள் வாயில் வரும் வார்த்தைகளை, சும்மா வைரமுத்து போல், ‘கணீர்’ குரலில், நல்ல அழுத்தமான உச்சரிப்போடு உங்கள் மேன்சன் வாட்ச்மேன், ரூம்மேட், காதலி அல்லது மனைவியிடம் பாடிக் காட்டுங்கள். அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, தேனாம்பேட்டை, தேங்காமட்டை என நீங்கள் எழுதும் கருத்தாழம்மிக்க, கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைத் தொடர்களால் அவர்கள் உங்களைத் திட்டலாம், அடிக்கலாம், இல்லை…தூக்கிப் போட்டும் மிதிக்கலாம். அதற்கெல்லாம் அயர்ந்துவிடாதீர்கள். காரணம், இப்போது நீங்கள் அரைக் கவிஞனாகிவிட்டீர்கள்.

5. மேற்சொன்ன முயற்சி ஒருவேளை உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக, எல்.ஐ.சி பாலிசி எடுப்பது விரும்பத்தக்கது. பிரீமியம் கட்ட வசதியில்லாதவரா, கவலை வேண்டாம்: மனதில் தோன்றிய வார்த்தைகளை, ஒரு பேப்பரில் கிறுக்குங்கள். பின் அதை ஒரு கோர்வையாக கோர்க்க, பொறுக்குங்கள். கிறுக்குவதால் நீங்கள் கிறுக்கன் என்றோ, பொறுக்குவதால் நீங்கள் "பொறுக்கி" என அழைக்கப்பட்டால், அதற்காக என் மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க முடியாது.

6. நீங்கள் பாடுபொருளாக ‘கொள்ளப்போவதை’ முதலில் உறுதி செய்து கொண்டு தான் மற்றவர்களை கொல்ல வேண்டும். உதாரணமாக "அக்கடானு நாங்க…….. துக்கடானு நீங்க”, “இது பீர் தந்த தொப்பை”, நித்தம் பல முத்தம் பெறும் அவளின் லக்கி நாய்”, “அவள் பாஸாக காரணம் நான் கொடுத்த பிட்டு” என யாரும் நினைக்காத அளவிற்கு, அந்த பொருள் வித்தியாசமாய் இருந்தால் உத்தமம்.

7. முக்கியமாக பாடல் எழுதும்போது, கேட்பவர்கள் தலையைப் பிய்ச்சுக்கிற மாதிரி சில சஸ்பென்ஸ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, "அசலி, ஃபிசலி என் ரசகளி”, “இந்திரன் தோட்டத்து முந்திரியே”, என்று எழுதிப் பழக‌ வேண்டும். எதார்த்தத்தை புட்டு புட்டு வச்சு ஈஸியா குத்துப் பாட்டு, மெல்லிசைப் பாட்டு எழுதிவிடலாம். உதாரணமாக, “குத்தாம குத்துது ஆம்பளை மீசை; பத்தாம பத்துது பொம்பளை ஆசை”, “லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே, லூசுப் பையன் உன்மேலத்தான் லூசா சுத்துறான்”.


8. இவ்வகையான‌ எதுகை, மோனை தவிர, நீங்கள் நடுநடுவே மானே, தேனே, பொன் மானே போன்றவற்றையும் கண்டுபிடித்து உட்புகுத்தினால், நல்லதொரு பாடலை மேலும் சுவையாக சமைக்க முடியும். அவ்வாறு சமைக்கும் போது மெட்ராஸ் தமிழுடன் நக்கல், பில்டப், குழப்பம், மர்மம் மற்றும் இன்ன பிற சமாச்சார‌ங்கள் சரியாக இருக்க வேண்டும்.

9. உடம்பில் மலச்சிக்கல் இருந்தால் எப்படி சீக்கிரத்தில் வராது பாடுபடுத்துமோ, அப்படித்தான் மனச்சிக்கல் இருந்தாலும் பாடல் கொஞ்சத்தில் வராது. அதே சமயம், இந்த இடத்தில்தான் பிறக்குமென்றும் சொல்ல முடியாது. உதாரணமாக, நீங்கள் சாலையில் நடக்கும் போது மோதுவது போல் வரும் வாகனமும், சடன் பிரேக்கில் அது குலுங்கி நிற்கும் அழகும் கூட நல்லதொரு பாடல் படைக்க வல்லவைதாம். சில சமயங்களில் மூத்திர சந்தில் நுழையும்போது, டாஸ்மாக்கில் கடைப் பரப்பும்போது, சில சமயங்களில் கழிவறைகளிலும். எனவே, எப்போதும் அலர்ட்டாக, காகிதமும், பேனாவும் கொண்டு செல்வது உத்தமம்.

10. இப்போது, ஓரளவு உங்களுக்கு ஒரு பாடலாசிரியருக்குரிய ஒரு 'கெத்து' வந்திருக்கும். அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி கொண்டுவந்தீர்களேயானால், இந்நாள் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா நாட்களும் தமிழ் பாடல்களால் மக்களைக் கிறங்கடிக்க முடியும் (மக்களை காது கிழிய நோகடிக்க முடியும் என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொல்வதாக நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டால் அடியேன் பொறுப்பல்ல) என்பதை நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. ஏனென்றால் தற்போது நீங்களும் ஒரு கவிஞர் அல்லது கவிதாயினி. வாழ்த்துக்கள்.

No comments: