எவ்வளவு தூரம்தான் விலகிச்சென்றாலும் மீண்டும்
மீண்டும் வந்து கால்களைத்தழுவிச்செல்லும் அலையைப்போல
அவ்வப்போது என் மரத்துப்போன இதயத்தை
வருடிச்செல்லும் உன்னைப்பற்றிய நினைவுகள்
இன்னமும் எனக்குவரும் கடிதங்களிலெல்லாம் உனது
பெயரை எதிர்பார்த்திருக்கும் என் கண்களில்
காத்திருக்கின்றது நமது காதல்
இன்றும் புதிதாக வெளிவரும் ஒவ்வொரு காதல் கவிதைப்
புத்தகங்களின் தலைப்புக்களையும் படிக்கும்போது
அவ்வப்போது தலையைக்காட்டி அமர்ந்து
கொள்கிறது நமது காதல்
ஒவ்வொரு மழைக்கால இரவுகளிலும்
தனிமையில் கழிக்கப்படும் பொழுதுகளிலும்
எமது காதல் கதையின் சிதறிப்போடப்பட்ட அத்தியாயங்கள்
என் உயிரை வலிக்கச்செய்கின்றன
என்னுடைய உடைமைகளெல்லாம் மறைந்துபோன
எம் காதலின் மறக்கமுடியாத சில பாகங்களை
அவ்வப்போது உரசிச்செல்ல
என் பழைய நாட்குறிப்புகளில் கவிதைகளாக
புதைந்து கிடக்கும், நீயும் நானும் சேர்ந்து
செதுக்கிய காதல் உணர்வுகள் என்னை
உணர்வுகளுக்குள் மூழ்கடித்து கொன்றுவிட முயல்கின்றது.
எவ்வளவு தூரம்தான் சென்றுவிட்டாலும்
திரும்பிப்பார்க்கின்றபோது கண்ணில் வீழ்ந்த தூசிபோல
உறுத்திக்கொண்டிருக்கும் இந்த சலனங்கள்
மறக்கமுடியாதவை
காத்திருக்கிறேன் காதலுடன்
நமக்காக காத்திருக்கும், கடற்கரை மரத்தடியில்
அமைந்திருக்கும் சீமெந்துக்கதிரை,
சூரியனால் அடைமுடியாத அந்த இருள் சூழ்ந்த நடைபாதை
பூக்களுடன் காத்திருக்கும் என் வீட்டுப்பூஞ்செடி
என் கண்களில் நிறைந்திருக்கும் கண்ணீர்த்துளிகள்..
No comments:
Post a Comment